“நெருக்கடியான காலத்தில் அவரை களத்தில் இறக்குங்கள், நெருக்கடி நிலையை லேசானதாக மாற்றிவிடுவார்” ஆம், தமிழ்நாட்டின் முதல் கிரிக்கெட் வருணனையாளராக இருந்த ஜாப்பரைதான் இவ்வாறு குறிப்பிடுகின்றனர் பல கிரிக்கெட் வல்லுநர்கள்.
ஒரு கிரிக்கெட் வருணனையாளராகவும், கிரிக்கெட் வீரராகவும் இருந்த அப்துல் ஜாப்பர் தன் வாழ்நாளில் மொத்தமாக 87 போட்டிகளில் விளையாடி 4270 ரன்களை எடுத்தவர். எப்போதும் விருவிருப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்த ஜாப்பர் யார் என்பதைதான் விளக்குகிறது இந்த தொகுப்பு.
தமிழர்களின் வாழ்வியல் முறையில் பொழுதுபோக்கு விளையாட்டாக பல விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட்டுக்கென தனி இடம் என்பது அனைவரின் மனதிலும் பிரதானமாக இருக்கக்கூடியது. அப்படி கிரிக்கெட்டை விரும்பிப் பார்க்கும் பலரின் மத்தியில் ஒற்றைத் தமிழனாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு கிரிக்கெட் வர்ணனையாளராக வலம் வந்தவர்தான் அப்துல் ஜாப்பர்.
தமிழ்நாட்டு ரசிகர்களால் அதிகம் போற்றப்பட்ட அப்துல் ஜாப்பர் தமிழ்நாட்டின் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர். தந்தை யூசுப் முகமது இலங்கையில் பணியாற்றிய காரணத்தால் சிறு வயதிலேயே இவர் இலங்கைக்குச் சென்றுவிட்டார். 90 களின் துவக்கத்தில் எல்லோரையும் போல இவருக்கும் ரேடியோ மீது அபரிமிதமான காதல் இருந்துள்ளது.
எப்போதும் ரேடியோ கேட்பது, நிகழ்ச்சிகள் குறித்த அவ்வப்போது கடிதம் எழுதுவதென இளைய பருவத்தை கழித்துவந்த இவருக்கு, தமிழ் கிரிக்கெட் வருணனை குறித்து எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்தது. இதனால் தமிழ்நாடு கேரளா இடையே நடந்த ராஞ்சி டிராபி போட்டியில் வருணனையாளராக பேச வாய்ப்பு கிடைத்தது.
வாய்ப்புகள் என்பது வாழ்க்கையின் சில தருணங்களில் மட்டும்தான் கிடைக்கும் என்பதை உணர்ந்திருந்த அப்துல் ஜாபர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். அவருக்குக் கிடைத்த இந்த முதல் வாய்ப்பு தான் இவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.
அனைவரையும் கவரும் அற்புதமான கம்பீரமான குரல் வளம் கொண்ட ஆளுமைதான் அப்துல் ஜாபர். அந்த காலமாக இருந்தாலும் சரி, இந்த காலமாக இருந்தாலும் சரி கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் எப்போதும் நீங்கா இடம் பிடிப்பவர்கள்தான் கிரிக்கெட் வர்ணனையாளர்கள். உண்மையில் ஒரு கிரிக்கெட் வருணனையாளராக இருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
அதற்கு துறை சார்ந்த பல நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒரு வீரர் எது போன்ற பந்தை வீசுகிறார் என்று தெரிந்திருக்க வேண்டும். ஆட்டத்தின் சிக்கலான நேரத்தில் வீரர்களையும் தாண்டி, ரசிகர்களை விறுவிறுப்போடு வைத்திருப்பது அந்த வருணனையாளரிடம்தான் உள்ளது. அப்படி தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டவர்தான் அப்துல் ஜாப்பர்.
கிரிக்கெட் வருணனையாளர் பயணத்தில் மொத்தமாக 35க்கும் மேற்பட்ட கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளுக்கு வருணனை செய்த ஜாப்பரின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது 1982ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்ற போட்டிதான். இந்த போட்டியில் வருணனை செய்ததற்காக அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரால் நேரில் அழைத்து பாரட்டப்பட்டார்.
வருணனையின் போது இவர் பேசும் தமிழுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அதன்படி தமிழ்நாடு மற்றும் இலங்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் அப்துல் ஜாப்பர். தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற கிரிக்கெட் வருணனையாளரான அப்துல் ஜாப்பர் ஒரு எழுத்தாளரும் கூட.
இவரது இலக்கிய நயம் மிகுந்த தமிழ் வருணனையால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இதனால் கடந்த 2002 ம் ஆண்டு ஜாப்பரை இலங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டி விருந்துவைத்தார் பிரபாகரன். அவர் மீது இருந்த அதீத அன்பினையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாகப் பிரபாகரனுடனான அவரின் சந்திப்பு குறித்து “அழைத்தார் பிரபாகரன்” என்ற புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார். மேலும் பிரபாகரனுடனான தன்னுடைய சந்திப்பையும், அவருடைய பாராட்டையும்தான் வாழ்வில் பெற்ற பெரும் பரிசு என்பதையும் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது நேர்காணல் ஒன்றையும் எடுத்திருந்தார் ஜாப்பர். தமிழ்நாடு மக்கள் மற்றும் இலங்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவந்த ஜாப்பர் பிரபாகரனை நேர்காணல் செய்த பின்பு அனைவராலும் அறியப்பட்டவராகவும் மாறியிருந்தார். இவரது வாழ்வின் சுவடுகளாக மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார் ஜாப்பர். காற்று வெளியினிலே, இறைத்தூதர் முகம்மது, அழைத்தார் பிரபாகரன் ஆகிய நூல்கள் வரலாறு கடந்து இவரது பெருமையை பேசக்கூடியவையாக உள்ளன.
ஒரு கிரிக்கெட் வருணனையாளராக அனைவராலும் பாராட்டப்பட்ட ஜாப்பர் சிறந்த பத்திரிகையாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டவர். தமிழ்நாட்டிலிருந்து முதல் கிரிக்கெட் வருணனையாளராகப் போற்றப்பட்ட அப்துல் ஜாப்பர் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் தருணத்தில் பல கோடி ரசிகர்கள் மனதில் நீங்கா நினைவாக இருந்துவருகிறார் ஜாப்பர்.
கட்டுரையாளர்; யுவராம் பரமசிவம்









