வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமானதையடுத்து கோயில் முகப்பு நிழலில்
குட்டி சிறுத்தை இளைப்பாறிய வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும், வெயிலின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் வனப்பகுதிகளிலும் வெயில் வாட்டி வதைப்பதால் இளைப்பாற வனவிலங்குகள் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றன.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குட்பட்ட
மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் சிறுத்தை, மிளா, காட்டுப் பன்றி, கரடி,
யானை உள்ளிட்ட வனவிலங்குள் வெயில் காரணமாக பகல் நேரங்களில் அடர்ந்த காடுகளுக்குள் முடங்கியுள்ளன.
இந்நிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டப்பகுதியில் உள்ள வடக்குத்தி அம்மன் கோயிலுக்கு சிலர் வழிபட சென்ற போது, கோயிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகை நிழலில் குட்டி சிறுத்தை ஒன்று ரிலாக்ஸாக படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்தது..
இதைப் பார்த்த பக்தர்கள் சிறுத்தை படுத்திருந்ததை செல்பேசியில் படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.







