வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் உத்தரவு!

வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவரது மனைவியும் வரும் 29ஆம் தேதி நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக…

வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவரது மனைவியும் வரும் 29ஆம் தேதி நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் 8 ஆண்டு காலம் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விஜயபாஸ்கர். இவர் தமது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 35 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்ளிட்ட 56 இடங்களில நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும், கடந்த மே மாதம் 22ம் தேதி புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ஏற்று கடந்த 5-ஆம் தேதி விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இந்நிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.