சென்னை கடற்கரை – வேளச்சேரி ரயில் நிலையம் இடையே பயணிகள் பாதுகாப்புக்காக 15 பேர் கொண்ட சிறப்பு ரயில்வே போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆம் தேதி இந்திரா நகர் ரயில் நிலையத்தில் பிரீத்தி என்ற பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற போது ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டதில் படுகாயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 8ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது இந்திரா நகர் ரயில் நிலையத்தில் சிசிடிவி செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, விரிவான அலசலுடன் கூடிய செய்தி, நியூஸ் 7 தமிழில் வெளியானது.
இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 15 பேர் கொண்ட சிறப்பு போலீஸ் படையை ரயில்வே காவல்துறை அமைத்துள்ளது. இந்த படையில் 10 ஆண் காவலர்களும் 5 பெண் போலீசாரும் உள்ளனர்.கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி ரயில் நிலையம் வரை இந்த சிறப்பு போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இவர்கள் பயணிகளிடம் பிரச்னை செய்யும் நபர்கள், திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பார்கள் என சென்னை ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






