உலக பல்கலைக்கழகங்களின் டைம்ஸ் தரவரிசை பட்டியலில் 91 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.
உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை லண்டனை தலைமையிடமாக கொண்ட டைம்ஸ் ஹையா் எஜுகேஷன் இதழ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம், உலகமயமாக்கல் உள்ளிட்ட 18 அம்சங்களைக் கருத்தில் கொண்டு சா்தேச பல்கலைக்கழக தரவரிசை மதிப்பிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் முதலிடத்திலும், ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம் 2-ஆவது இடத்திலும், மசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) 3-ஆவது இடத்திலும் உள்ளன.
முதல் 200 இடங்களுக்கான பட்டியலில் கடந்த ஆண்டு 28 ஆசிய பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், நிகழாண்டு 33-ஆக அதிகரித்துள்ளது.
பட்டியலில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), சென்னை அண்ணா பல்கலைக்கழகம், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா, மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், ஷூலினி பயோடெக்னாலஜி மற்றும் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் பல உள்ளன.
இதில் மொத்தம் 91 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடங்களைப் பெற்றுள்ளன, பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக முதலிடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஆறாவது இடத்திலிருந்து முன்னேறி, 2024 தரவரிசையில் நான்காவது இடத்திற்கு இந்தியா உயர்ந்துள்ளது.
இந்தப் பட்டியலில் இரண்டாவது சிறந்த செயல்திறன் கொண்ட இந்தியப் பல்கலைக்கழகங்களாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா, மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் மற்றும் ஷூலினி பயோடெக்னாலஜி மற்றும் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும்.
இந்திய அளவில் 2-ஆவது இடத்தில் உள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 801-1000 பிரிவில் இருந்து தற்போது 501-600 பிரிவுக்கு முன்னேறி, உலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் , சவீதா மருத்துவப் பல்கலைக்கழகம், வேலூா் விஐடி ஆகியவை 601-800 பிரிவுக்கு முன்னேறியிருக்கின்றன.
திருச்சி என்ஐடி 801-1000 பிரிவில் இடம்பெற்றுள்ளது. தாம்பரம் கிரெசன்ட், கோவை காருண்யா, தஞ்சை சாஸ்த்ரா, சென்னை சத்யபாமா, எஸ்.ஆா்.எம்., மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி, ஆவடி வேல்டெக் ஆகியவை 1201-1500 பிரிவில் இடம்பெற்றுள்ளன.
அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பாரத், ஹிந்துஸ்தான் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவை 1501+ பிரிவில் இடம்பெற்றுள்ளன.







