திருச்சி மணச்சநல்லூர் அருகே வீட்டில் கள்ளநோட்டு தயாரித்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே வாழ்மால்பாளையம் கிராமத்தில் வீட்டில் கள்ள நோட்டு தயாரித்து வருவதாக மண்ணச்சநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் உள்ளிட்டோர் வால்மால்பாளையம் மேலூர் பகுதியில் உள்ள தர்மராஜ் என்பவர் வீட்டில் நேற்று சோதனை செய்தனர்.
அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வல் துறையினர் சோதனை செய்தில் அவை கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து தர்மராஜ், ஸ்ரீரங்கம் அருண்குமார் (40), திருச்சி சிந்தாமணியைச் சேர்ந்த குணா (24) ஆகிய மூவரையும் காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த விசாரணையில் மூவரும் கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில்விட முயற்சித்தது தெரியவந்தது. மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த திருச்சி பழைய மதுரை சாலை வீரப்ப நாயக்கர் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (24), புதுக்கோட்டை மாவட்டம் நக்கீரர் வயல் பகுதியை சேர்ந்த மதன் குமார் (21) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து ஐந்து பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர் கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்திய கணினி, ஸ்கேனர் போன்ற பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி அருகே வீட்டிலேயே கள்ளநோட்டு அடிக்க முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








