மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடல் போல அவரது நினைவிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அந்த இடத்தில் 2.21 ஏக்கரில் கருணாநிதி நினைவிடம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நினைவிடத்திலிருந்து 290 மீ தூரத்திற்குக் கடற்கரை, 360 மீ தூரத்திற்குக் கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்குப் பாலம் அமைக்கப்பட்டு 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா சின்னத்தை நிறுவத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திட்டமிட்டு வருகிறது.
அண்மைச் செய்தி: ‘முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினம்; பெசண்ட் நகரில் மாரத்தான்’
தமிழ்நாட்டில் உள்ள, சிலைகளை விட இந்த நினைவுச் சின்னம் உயரமாக அமையவிருப்பதால், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகழ் நிலைத்து நிற்கும் எனச் சொல்லப்படுகிறது. உலகத்தரத்தில் உருவாக்கப்படும் இந்த நினைவுச் சின்னமானது, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் கருணாநிதியின் புகழை மங்கச் செய்யாதவாறு வடிவமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2.23 ஏக்கர் பரப்பளவில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையும் எழுத்தையும் பிரிக்கவே முடியாது என்பதற்கேற்ப வாழ்நாளின் இறுதிக்காலம் வரை எழுதிய பெருமைக்குரிய அவருக்கு மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் நினைவிடத்தில் பிரம்மாண்ட பேனா சிலை நிறுவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்கக் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது முதல் அந்த நினைவிடம் நாள்தோறும் கட்சியினர் சார்பில் மலர்களால் தினசரி அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், 4-ஆம் ஆண்டு நினைவை அனுசரிக்கும் விதமாகக் கருணாநிதி நினைவிடத்தில், கடல் போன்ற மாதிரியை வடிவமைத்து அலங்கரித்துள்ளனர்.








