46-வது பிறந்த நாள் – பெற்றோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தனது 46வது பிறந்தநாளை முன்னிட்டு பெற்றோரை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். திமுகவின் இளைஞர் அணி செயலாளரும்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது…

தனது 46வது பிறந்தநாளை முன்னிட்டு பெற்றோரை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

திமுகவின் இளைஞர் அணி செயலாளரும்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள  முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா,  கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  மேலும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தாயார் துர்கா ஸ்டாலினை  நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.  அப்போது சிகரம் ச செந்தில்நாதன் எழுதிய ” குடியரசு தலைவர் ஆளுநர் அதிகாரங்கள்” என்ற புத்தகத்தை வழங்கி வாழ்த்து பெற்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் தலைவர்கள்,  தொண்டர்கள், திரைபிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தனது பிறந்தநாளையொட்டி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி;  அப்போது “தாய் வீட்டில் கலைஞர்” என்ற புத்தகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கி.வீரமணி வழங்கினார்.  கி.வீரமணிக்கு “திருக்குறள்” புத்தகத்தை அமைச்சர் உதயநிதி பரிசளித்தார்.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு திமுகவின் மூத்த முன்னோடிகள் 500 பேருக்கு பொற்கிழி மற்றும் 500 மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான முன்னோட்டமாக தலா 10 பேருக்கு பொற்கிழி மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு,  அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  மெய்யநாதன்,  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..

” 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிறந்த நாளையும் சிறந்த நாளாக மாற்றக் கூடியவர் அமைச்சர் சேகர்பாபு. இந்த நிகழ்ச்சி மனதிற்கு நெருக்கமானது.

கழக முன்னோடிகளான நீங்கள் இல்லாமல் இந்த இயக்கம் இல்லை,  கலைஞர் இல்லை.  உங்கள் வாழ்த்துகளை பெற வந்துள்ளேன்,  உங்கள் வாழ்த்துக்கள் இல்லாமல் கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவு பெறாது.

நான் எனது பிறந்த நாளில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டேன்.  ஆனால் அமைச்சர் சேகர் பாபுவுக்கு மட்டும் இது விதிவிலக்கு.  ஏனென்றால் அவர் சொன்ன வார்த்தையை கேட்பேன்,  அவரும் நான் சொல்வதை கேட்பார்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.