மகாராஷ்டிரா: நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகப்பட்ச மழைப்பொழிவு இந்த ஜூலை மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் ராய்காட்…

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகப்பட்ச மழைப்பொழிவு இந்த ஜூலை மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் ராய்காட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாவட்டத்தை உள்ளடக்கிய கொங்கன் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஹெலிக்காப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக ராய்காட் மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 32 உடல்கள் ஒரு இடத்திலும், 4 உடல்கள் மற்ற பகுதிகளிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ளவர்கள், நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளவர்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக ரத்தனகிரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் நீர்மட்டம் கூடுதலாக 12 அடி உயர்ந்துள்ளது. வசிஷ்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிப்பிலிருந்து மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படையினர் களமிறங்கியுள்ளனர். இந்த சூழலில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொரோனா நெருக்கடியுடன் சேர்த்து தற்போது இந்த நிலச்சரிவையும் மகாராஷ்டிரா சந்தித்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபடுவோர் மீட்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதையும், தொற்று பாதிக்காதவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.