சென்னையில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான பிரேம்குமார், தனது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கால் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக அவரது மகன் பிரதீப் குமார் கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளார்.
பிரதீப் குமாரின் அலறல் சத்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிக்கும் சாரநாதன் மற்றும் பிரமோத் ஆகியோர் உதவி செய்வதற்காக கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் 4 நபர்களும் மயங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் விஜயராகவன், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து, நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதில், பிரேம்குமார் மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு பிரமோத் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாரநாதன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.







