தூத்துக்குடி அருகே பேரூரணி கிராமத்தில் குளத்திற்கு குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி
மீனா. இவர்களுக்கு 13 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் சந்தியா என்ற பெண் குழந்தையும், 10 வயதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணவேணி என்ற பெண் குழந்தையும், 7 வயதில் இரண்டாம் வகுப்பு படிக்கும் இசக்கி ராஜா என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் இவர்களின் மூன்று குழந்தைகளும் தங்கள் உறவினர்களுடன் பேரூரணியில் அமைந்துள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்ற மூன்று குழந்தைகளும் நீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர். இதனைத்தொடர்ந்து மூன்று குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக
இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்
தொடர்பாக தட்டப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.




