சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கு 23 லட்சத்திற்கான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் திறப்பு விழா குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியில் ஒரு பரம்பு ஒன்று பரந்து விரிந்து காணப்பட்டது. இப்பகுதியில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைப்பதாகவும் அதை பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் கோரிக்கை விடுத்தார். இந்த செய்தி நியூஸ் 7 தமிழ் வாயிலாக வெளியிடப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு மூன்று கட்டங்களாக மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தன.
இதில் முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், பானைகள், பானை ஓடுகள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அந்த தாழியிலிருந்து நெல்மணிகள் கண்டெக்கப்பட்டன. அதன் வயது 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கடந்த வருடம் நடந்த சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன் பின்னர் கவனம் பெறப்பட்ட தொல்லியல் ஆராய்ச்சியினை கருத்தில் கொண்டு சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர்.
அதே பகுதியில் தோண்டப்பட்ட குழியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குழிகளும் மூடப்படவில்லை என்பதால் அருங்காட்சியகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததாக கூறி வந்தனர். இந்நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் 23 லட்சம் மதிப்பில் இரண்டு தகரத்தால் ஆன ஷெட் அமைக்கும் பணிகள் தொடங்கியது.
பொருட்களை பாதுகாத்து வைப்பதற்காக ஷெட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது என்று தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-அனகா காளமேகன்






