கேரளம் மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 16 பேர் சுற்றுலா வேனில் கடந்த புதன் கிழமை கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளம் செல்வதற்காக வேனில் சென்ற போது வால்பாறை மலைப்பாதையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி 800 அடி வனப்பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழகத்தின் கோவையில் நிகழ்ந்த துயரமான சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் மிகுந்த வேதனையடைந்துள்ளேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







