பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியைச் சேர்ந்த பத்து கைவினைக் கலைஞர்களின் கைவினைப் பொம்மைகள், இணைய வழியில் நடக்கவிருக்கும் இந்தாண்டின் இந்திய பொம்மைக் கண்காட்சியில் இடம்பெற உள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான இந்திய பொம்மைக் கண்காட்சி, வரும் பிப்ரவரி 27 தொடங்கி மார்ச் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கைவினை பொம்மைகள் தயாரிப்பு அதிக வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
இதில் குறிப்பாக இந்திய புவிசார் குறியீடு பெற்ற வாரணாசியின் மரபொம்மைகள், கோரக்பூரின் டெரக்கோட்டா பொம்மைகள் மற்றும் காசிப்பூரின் சணல் கயிறு கொண்டு தயாரிக்கப்படும் பொம்மைகள் உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற 19 வகை பொம்மைகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவில் பொம்மைகள் விற்கப்படும் தொழில்துறை நிறுவனம் என்பது உலகளவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியதை அடுத்து இந்தக் கண்காட்சி ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய வழிக் கண்காட்சியில் ஆயிரத்துக்கும் மேல் பொம்மை கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இந்தக் கண்காட்சியின் தீம் ‘Vocal for Local’ எனக் கூறப்படும் ‘உள்ளூர் வாசிகளின் குரல்’ அடிப்படையில் பிரதமர் மோடி தொகுதியான வாராணசியைச் சேர்ந்த பத்து கைவினைக் கலைஞர்கள் தாங்கள் செய்த பிரத்தியேகப் பொருட்கள் உள்பட கைவினைப் பொருட்களை உருவாக்குவதில் விருதுகளைப் பெற்ற பல்வேறு கைவினைக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







