கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், புயலால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தல், மின் கம்பிகளால் ஏற்படும் ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளித்தல், நீர்நிலைகள் மற்றும் கடலோரங்களில் பொதுமக்கள் கூடாமல் இருப்பதை கண்காணித்தல், பழமையான கட்டடங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தல், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தயார் நிலையில் வைத்திருத்தல், மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே அவர்களுக்கு தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு புரெவி புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 7 லட்சம் நிவாரண உதவியாக அறிவிக்கப்பட்டது. கனமழை மற்றும் புயலால் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும், வீடுகளில் சேதம் ஏற்பட்டவர்களுக்கும் நிவாரண உதவிகளை அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், கே.பி.அன்பழகன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயக்குமார் தலைமை செயலாளர் சண்முகம், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.







