நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் சட்ட மசோதா ஒன்றை மகாராஷ்டிர மாநில அரசு உருவாக்கியுள்ளது.
இந்த சட்டத்தின்படி பாலியல் வழக்குகள் 15 நாட்களுக்குள் விசாரிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். அதே போல பாலியல் குற்றச்சாட்டு புகாரில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாதவாறு ஆயுள் தண்டனை, மரண தண்டனை உள்ளிட்டவைகள் வழங்கப்படும். மேலும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுபவர்களுக்கு அவர்களின் மருத்துவ செலவிற்காக ரூ.10 லட்சம் வரை குற்றவாளிகளிடம் இருந்து வசூலித்து தரப்படும். இந்த சட்டத்தின்படி பாலியல் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களும், அதிகாரிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது.
இதற்காக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் “சக்தி சட்டம்” என்ற இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மசோதா வரவிருக்கும் குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் ஒப்புதலுக்கு வரும் என்றும், அதன்பிறகு மத்திய அரசின் ஒப்புதலுக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் அனுப்பப்படவுள்ளது.







