மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மதுரையில் தேர்தல் பிரச்சார சுற்று பயணத்தை தொடங்கியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்துக்கு தீவிரமாகி வருகின்றன. அதிமுக. தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் மற்றொரு அணியும் உள்ள நிலையில், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இந்த தேர்தலில் புதிதாக களம் இறங்கி உள்ளனர். இந்நிலையில், “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் கமல்ஹாசன் முதல் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் இன்று தொடங்கியுள்ளார். தொடர்ந்து 4 நாட்கள் அவர் பிரசாரம் செய்யவுள்ளார். இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தமிழகத்தை எப்படி சீரமைப்பது என்பதன் அடிப்படையில் தனது பிரச்சாரம் இருக்கும் என்று கூறினார். தங்கள் பிரச்சாரத்திற்கு பல இடங்களில் அனுமதி கிடைத்தாலும், நகரங்களுக்குள் பிரச்சாரம் செய்ய கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
மதுரை சென்றடைந்த பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தமிழகத்தில் மூன்றாவது அணி சாத்தியம் என்றார். அதே நேரம் 3வது அணி எப்போது அமையும் என தற்போது கூற முடியாது என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். அதன்பின்னர், மதுரை அவனியாபுரத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, தனது காரில் நின்றபடி, கமல்ஹாசன் பொதுமக்களை பார்த்து, கரங்களை கூப்பி கையசைத்தபடியே சென்றார்.




