துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 57 லட்சம் மதிப்பிலான 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தபோது, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேரின் கணினி மற்றும் மடிக்கணினிகளில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், 8 பேரின் உள்ளாடைகளில் மறைத்து எடுத்துவந்த தங்கக் கட்டிகள், தங்க பேஸ்ட்டுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து 8 பேரை கைது செய்த சுங்கத்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.







