கோயில் முதல் மரியாதை தொடர்பாக இரு தரப்பினர் மோதல்: முன்னாள் எம்எல்ஏ கைது!

மதுரை அருகே கோயில் முதல் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள்…

மதுரை அருகே கோயில் முதல் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம். இவர் கடந்த 2001 – 2006 ஆம் ஆண்டு சமயநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகித்தார். இந்நிலையில் பொன்னம்பலத்தின் சொந்த ஊரான கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவிலின் உற்சவ விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கோயிலில் மரியாதை அளிப்பதில் கருவனூர் திமுக கிளை செயலாளர்
வேல்முருகன் தரப்பினருக்கும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது வேல்முருகன் தரப்பினரும், பொன்னம்பலம் தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டதாக தெரிகிறது.

இதில் பொன்னம்பலம் வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வீட்டின் ஜன்னல்களையும், டீவி, ப்ரிட்ஜ். பைக் கார்கள் சேதம் அடைந்தது. மேலும் பொன்னம்பலத்தின் கார் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டது. மேலும் அருகில் இருந்த வீடுகளும் தாக்கப்பட்டது.

அப்போது பொன்னம்பலம் உறவினர் விஜய் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.
இது தொடர்பாக பொன்னம்பலம் உள்ளிட்ட 20 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட
8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ
பொன்னம்பலம் அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 3 பேரை
சத்திரபட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

அதே போல் மற்றொரு தரப்பை சேர்ந்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் திமுக கிளை செயலாளர் வேல்முருகன், செந்தமிழன், ராஜமோகன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மோதல் காரணமாக கருவனூர் கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.