கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா மாநில அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள் தோறும் அதிகரிக்கும் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளையும் துரிதப்படுத்தியுள்ளது. இதன்படி இங்கிலாந்தின் ஆஸ்டரா சென்கா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்தியவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனம், தான் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனையை கடந்த மாதம் 20 ஆம் தேதி மேற்கொண்டது. இந்த பரிசோதனையின் போது ஹரியானா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தனது உடலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
தற்போது அவருக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு சுமார் 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் அனில் விஜ், எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது அம்பாலா கண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.







