தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த மே 7ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைத்தொடர்ந்து கடந்த மே 11ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் மே 11ம் தேதி தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் முதல் நாள் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இரண்டாவது நாள் சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் போட்டியின்றி அப்பாவு சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினமே அவர் பதவியேற்றுக்கொண்டார்.
அதன்பின் தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா அதிகரித்ததையடுத்து வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து சட்டசபையை கூட்ட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அந்தவகையில், சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். அப்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்து கலந்தாலோசித்ததாக தகவல்கள் வெளியானது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “ஜூன் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். பேரவையில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.







