ராஜஸ்தானில் 12 மணி நேரத்தில் 2,413 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீமஹாவீர் கோஷாலா கல்யாண் சன்ஸ் தான் என்ற அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு சேவை செய்யும் வகையில் ஏழை மக்களின் திருமணத்தை நடத்தி வைக்க அந்த அமைப்பு முடிவு செய்திருந்தது.
அதன்படி, அறக்கட்டளை சார்பில் கடந்த மே 26-ம் தேதி பரன் நகரில் இந்து, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு மதங்களைச் சேர்ந்த 2,413 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மேலும், புதுமணத் தம்பதிகளுக்கு நகைகள், படுக்கை, பாத்திரங்கள், டிவி, குளிர்சாதனப் பெட்டி போன்றவை பரிசாக வழங்கப்பட்டன.
6 மணி நேரம் நடந்த இந்த விழா, விரைவில் கின்னஸ் சாதனையில் இடம் பெறும் என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த விழாவில் திருமண சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு ஜோடிக்கும் அரசு அதிகாரிகள் திருமணச் சான்றிதழை வழங்கினர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்தும் கொடுக்கப்பட்டது.








