“ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் வேலை செய்கிறார்கள்..” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்‌ பேச்சு!

ஆண்களை விட அதிகமாக வேலை செய்பவர்கள் பெண்கள் தான் அதனை அங்கீகாரம் செய்து மகளிர் உரிமை தொகை வழங்குகிறோம்” என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னவள்ளிக்குளம் கிராமத்தில் ரூ 18.50 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில்  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கலந்து கொண்டார்.

பின்னர் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.  அதே போல் ரூ.2 கோடியே 11 லட்சம் மதிப்பில் புதிதாக போடப்பட்டுள்ள தார் சாலையையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்‌ பேசியதாவது..

“ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களைத்தான் அதிகம் நம்புகிறார்.‌ பெண்களுக்கு தான் கட்டணம் இல்லாத பேருந்து பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது.‌ பெண்களிடம் கொஞ்சம் பணம் மிஞ்சினாலும் அது வீட்டிற்கு செல்லும். ஆனால் ஆண்களிடம் பணம் மிஞ்சினால் அது டீ கடைக்கும் வடை கடைக்கும் தான் செல்லும். ஆயிரம் ரூபாயும் மகளிர் உரிமை தொகையாக மகளிருக்கு தான் வழங்கப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகை ஒரு சிலருக்கு வராமல் உள்ளது. விடுபட்ட‌ தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்களை விட அதிகமாக வேலை செய்பவர்கள் பெண்கள் தான். நீங்கள் வேலை செய்வதை அங்கீகாரம் செய்து உங்கள் சகோதரனாக மகளிர் உரிமை தொகை வழங்குகிறோம்” என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.