இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து 3வது பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இணைந்து படத்திற்கான இசையை உருவாக்கி வரும் வீடியோ அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இதனைத்தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்துடன் முடிவடியவுள்ளதாகவும், அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியானது. சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் பிரதான காட்சிகளை பார்த்ததாகவும், படத்திற்காக இயக்குனர் சங்கருக்கு நன்றி என்றும் பதிவிட்டிருந்தார்.
https://twitter.com/ikamalhaasan/status/1674012086463234050
இந்நிலையில், மாமன்னன் படத்திற்காக நேர்காணல் ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”இந்தியன் – 2 திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. கமல் சாரும் ஷங்கர் சாரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இரண்டாம் பாகத்திற்காக அதிக காட்சிகளை ஷங்கர் எடுத்து முடித்துவிட்டார். தேவைப்பட்டால் இப்படத்தின் மூன்றாவது பாகம் உருவாக வாய்ப்புள்ளது.” எனக் கூறியுள்ளார். நடிகர் உதயநிதியின் இந்த பேட்டி கமல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







