அதிமுகவுடன் அமமுக இணையுமா?- டிடிவி தினகரன் விளக்கம்

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கு இருந்தாலும் அமமுகவில் இணைய வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்புவிடுத்துள்ளார்.  அரியலூரில்  அமமுக செயல்வீரர்கள் கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கு இருந்தாலும் அமமுகவில் இணைய வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்புவிடுத்துள்ளார். 

அரியலூரில்  அமமுக செயல்வீரர்கள் கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், முன்னாள்  அமைச்சர் பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவில், அதிமுகவில் தற்போது என்ன நடக்கிறது என்கிற முழு உண்மையும் வெளிவந்துவிட்டதாகக் கூறினார். ஆனால் யாருக்கோ பயந்துகொண்டு, தான் பேசியதை ஒப்புக்கொள்ள பொன்னையன் மறுப்பதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.

இது தொடர்பாக தாம் பேசியது குறித்து வழக்கு தொடரப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்ததை சுட்டிக்காட்டிய டிடிவி தினகரன், வழக்கை ச்ந்திக்க தான் தயார் எனக் கூறினார். அப்போதுதான் ஆடியோவின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு  அதிமுகவில் நடக்கக் கூடிய அனைத்து சம்பவங்களும் தொண்டர்களுக்கு தெரிய வரும் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். அதிமுகவில் ஜாதி ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், மறைந்த முதவமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான இயக்கம் அமமுகதான் எனக் கூறினார், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கிருந்தாலும் அமமுகவில் இணைந்து ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் ஏற்பட ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட டிடிவி  தினகரன், அதிமுகவுடன் அமமுக ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.