இந்த வாரம் திரெளபதி 2, ஹாட்ஸ்பாட் 2, மாயபிம்பம், ஜாக்கி, வங்களா விரிகுடா, மங்கத்தா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ!
திரெளபதி 2
மோகன் ஜி. இயக்கத்தில் ரிச்சர்ட், நட்டி, ரக்ஷனா உட்பட பலர் நடித்த படம் திரெளபதி 2. 14ம் நுாற்றாண்டில் திருவண்ணாமலையை தலைநகராக கொண்டு ஆண்ட தமிழ் மன்னர் வல்லாளர், அவரின் விசுவாசி கடாவராயன், டில்லியை ஆண்ட துக்ளக், தேவகிரியை ஆண்ட பல்வான், மதுரையை ஆட்சி செய்த தம்பானி ஆகியோருக்கு இடையேயான பகை, போர், சூழ்நிலை ஆகியவற்றை விவரிக்கிறது. வல்லாளர் மன்னராக நட்டி சிறப்பாக நடித்து இருக்கிறார். அவரின் கெட்அப், நடிப்பு சிறப்பு.
கடாவராயனாக வரும் ரிச்சர்ட் சண்டைக்காட்சிகள், எமோஷனல் காட்சிகள் ஓகே. திரெளபதியாக வரும் ரக் ஷனாவும் கதைக்கு முக்கியமான கேரக்டர். டில்லி துக்ளக் ஆக வரும் சிராஜ், மதுரை தம்பானியாக வரும் லம்பாவின் நடிப்பும் கவர்கிறது. அந்த காலத்தில் இப்படியெல்லாம் நடந்து இருக்கிறதா? வட தமிழகத்தின் பங்கு இப்படிப்பட்டதா என்ற விஷயங்கள் புதுசு. ஆனாலும், பட்ஜெட் காரணமாக பிரமாண்ட காட்சிகள் சின்னதாக எடுக்கப்பட்டுள்ளன.
சில வரலாற்று காட்சிகள் கதையுடன் ஒட்டவில்லை. மதமாற்றம் குறித்து நிறைய விஷயங்கள் பேசியிருக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாம். ஜிப்ரானின் பாடல், பின்னணி இசை படத்துக்கு பலம். ஆனாலும் படத்தின் நீளம், வசனங்கள், சில குழப்பமான கதை அமைப்புகள் பின்னோக்கி இழுக்கின்றன. வரலாற்று கதை என்பதால் சிலருக்கு புரிவதற்கு கஷ்டமாக இருக்கும். மத ரீதியான விஷயங்கள் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தலாம்.
ஹாட்ஸ்பாட் 2
விக்னே ஷ்கார்த்திக் இயக்கத்தில் உருவான ஹாட்ஸ்பாட் படத்தின் அடுத்த பாகம். ஒரு தயாரிப்பாளரிடம் 3 மாறுபட்ட கதைகளை சொல்கிறார் ப்ரியா பவானி சங்கர். அவர் கதையும் தனி. இப்படி 4 கதைகளின் தொகுப்பாக ஹாட்ஸ்பாட் 2 அமைந்துள்ளது. முதற்கதை இரண்டு ஹீரோக்கள், அவர்களின் தீவிர 2 ரசிகர்கள் பற்றியது. ஒரே நாளில் 2 ஹீரோக்களின் படங்களும் வெளியாக உள்ள நிலையில், இந்த 2 ரசிகர்களின் குடும்பத்தினரை கடத்தி வைத்து வில்லன் மிரண்டுகிறான். 2 ஹீரோக்களுக்கும் சில நிபந்தனை விதிக்கிறான்.தங்கள் ரசிகர்களுக்காக அதை செய்தார்களா அந்த ஹீரோக்கள் என்பது கதை.
ரசிகர்களாக ஆதித்யா பாஸ்கர், ரக் ஷன் சிறப்பாக நடிக்க, முக்கியமான அட்வைஸ் செய்யும் கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கர் கலக்கியிருக்கிறார். பல முன்னணி ரசிகர்களுக்கு இந்த கதை நல்ல மெசேஜ். அடுத்த அப்பா, மகள் பற்றியது. மார்டன் மகளாக சஞ்சனாவும், மகள் இப்படி இருக்கிறாரே என்று பதறும் பாசக்கார தந்தையாக தம்பிராமயைாவும் நடித்து இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான ஒரு வித சண்டை, பலருக்கு பாடம். இந்த போர்ஷன் டச்சிங்.
2050ல் வசிக்கும் பவானிஸ்ரீயை, 2026ல் வசிக்கும் ஹீரோ அஷ்வின் தொடர்பு கொண்டு பேசுகிறார். அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். அதெப்படி முடியும். அவர்கள் சேர்ந்தார்களா என்பது அடுத்த பேண்டசி கதை. பவானிஸ்ரீ நடிப்பு, அஷ்வின் கேரக்டர் அருமை. இரண்டுபேரும் இணைகிற காட்சிகள், அடுத்து நடக்கும் டுவிஸ்ட் புதுமை. கடைசியில், கதை சொல்ல வந்த ப்ரியா பவானி் சங்கர் யார்? தயாரிப்பாளர் என்ன செய்கிறார் என்பதையும் சொல்லி படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர். ப்ரியா பவானி சங்கர் இதுவரை நடித்திராத துணிச்சலான கேரக்டரில் நடித்து இருக்கிறார். முதற்பாகம் மாதிரி 2வது பாகம் இல்லை என்றாலும் ஏமாற்றவில்லை. இளைஞர்கள், புதுமை விரும்பிகளுக்கு படம் பிடிக்கும்.
மாயபிம்பம்
சிதம்பரத்தில் டாக்டருக்கு படிக்கும் ஹீரோ ஆகாஷ்க்கும், அங்கே நர்ஸ் ஆக பணியாற்றும் ஜானகிக்கும் நட்பு ஏற்படுகிறது. நண்பர்களின் தவறான வழிகாட்டுதால் சில தவறுகளை செய்கிறார் ஆகாஷ். அதனால் ஜானகி விலகுகிறார். மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? காதல் கனிந்ததா? டாக்டருக்கு படிக்கும் ஆகாஷ், ஜெயிலுக்கு போனது ஏன் என்ற கதைகளத்தில் உருவாகி உள்ள படம் மாயபிம்பம். கே.ஜே. சுரேந்தர் இயக்கியுள்ளார். பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்து இருந்தாலும் நடிகர்கள், கதைக்களம், திரைக்கதை, சொல்லும் விஷயங்கள், கிளைமாக்ஸ் பிரஷ் ஆக இருக்கிறது.
ஹீரோ ஆகாஷ், ஹீரோயின் ஜானகி இருவரின் நடிப்பு, பேசும் வசனங்கள், அவர்களுக்கு இடையேயான சீன்கள் அவ்வளவு எதார்த்தமாக, ரசிக்கும்படி இருக்கிறது. ஹீரோயின் நண்பர்கள், அவர்களின் உணர்வு, காமெடி, ஹீரோயின் தோழி, ஹீரோ அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, குழந்தை என படம் முழுக்க சினிமாத்தனம், ஓவர் பில்டப் இல்லாமல் இருப்புது மாயபிம்பத்தின் பிளஸ். அதுவே படத்தை ரசிக்க வைக்கிறது.
சின்ன தவறு அல்லது சின்ன மனத்தடுமாற்றம் குறித்து விரிவாக பேசி, கடைசியில் நெஞ்சை கலங்க வைக்கும் கிளைமாக்சை கொடுத்து இருக்கிறார் இயக்குனர். ஹீரோயின் ஜானகி நடிப்பு சபாஷ். வழக்கமான ஹீரோயிஷம், ஓவர் ஆக் ஷன், வெட்டு குத்து, பொருந்தாத காதல் படங்களை விரும்பாதவர்கள், மலையாள சினிமா மாதிரி கதைக்கு முக்கியத்துவமுள்ள, இயல்பான சினிமாவை விரும்புகிறவர்களுக்கு மாயபிம்பம் கண்டிப்பாக பிடிக்கும். பல காலம் மனதில் நிற்கும்.
ஜாக்கி
மதுரையில் நடக்கும் கிடாய் சண்டை பின்னணியில் மண் மணத்துடன் உருவாகி இருக்கும் படம் ஜாக்கி. மதுரையில் ஆட்டோ ஓட்டும் யுவன் கிருஷ்ணாவுக்கும், அங்கே மீன் வியாபாரியாக இருக்கும் ரிதன் கிருஷ்ணாவுக்கும் கிடாய் சண்டையால் பகை வருகிறது. யாராலும் வெல்ல முடியாத வில்லன் ரிதன் கிடாயை, ஹீரோ யுவன் கிடாய் தோற்கடிக்கிறது. அடுத்து நடக்கும் போட்டியில் ஜெயித்தது யார்? இடைப்பட்ட காலத்தில் இந்த பகையால் என்னென்ன பிரச்னைகள் என்பதை இயக்குனர் பிரகபல் நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். இதுவரை இப்படிப்பட்ட கதை களத்தில், இவ்வளவு ஆக்ரோசமாக யாரும் கிடாய் சண்டையை தமிழ் சினிமாவில் காண்பித்தது இல்லை.
ஹீரோவாக நடித்த யுவனும், வில்லன் ரிதனும் போட்டி போட்டி சண்டை போடுகிறார்கள். அவர்களின் கிடாய் இவர்களை விட ஆக்ரோசமாக களத்தில் மோதுகிறது. ஹீரோயினாக நடித்த அம்மு அபிராமி காதல் போர்ஷன் அழகாக இருக்கிறது. ஹீரோ அக்காவாக உணர்ச்சிபூர்வமாக, நல்ல நடிப்பை தந்து இருக்கிறார் சரண்யா ரவிசந்திரன். ஹீரோ டீமில் இருக்கும் சித்தன், யோகி, மதுரை மக்கள் என அனைவரும் அந்த கேரக்டரில் ஜொலித்து இருக்கிறார்கள்.
மதுரை பின்னணி, கிடாய் சண்டை தகவல்கள், களத்தில் நடக்கும் விஷயங்கள், அந்த சண்டையின் விதிமுறைகள், சண்டையால் ஏற்படும் பிரச்னைகள் என பல விஷயங்களை சிறப்பாக சொல்லி, மறக்கமுடியாத நல்ல படைப்பை தந்து இருக்கிறார் இயக்குனர். படம் நீளம், ஆங்காங்கே தொய்வு, ஹீரோ நடிப்பில் குறை என சில மைனஸ் இருந்தாலும் கிடாய் சண்டையை முதன்முறையாக, அழுத்தமாக பதிவு செய்த படமாக ஜாக்கி அமைந்துள்ளது.
வங்காள விரிகுடா
குகன் சக்ரவர்த்தியார் என்பவர் இயக்கி, நடித்து, ஒளிப்பதிவு செய்து, எடிட் செய்து, இன்னும் சொல்லப்போனால் 21 துறைகளை ஒரே ஆளே கவனித்து இ யக்கிய படம் வங்காள விரிகுடா. துாத்துக்குடி தொழிலதிபரான குகன் சக்ரவர்த்தியாரின் காதல், கல்யாணம், அரசியல் வாழ்க்கை என மூன்றையும் பேசுகிறது கதை. காதலி, மனைவியாக வருபவர்கள் நடிப்பும், அவரின் ஆதரவாளர்களாக வரும் வையாபுரி, வாசு விக்ரம் நடிப்பும் ஓகே. தானே அனைத்து துறைகளையும் வைத்து இருப்பதால் நடித்து தள்ளியிருக்கிறார்.
அவருக்கு ஏகப்பட்ட பில்டப், எமோஷனல் சீன். கடைசியில் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் இறுதி ஊர்வல காட்சிகளை வைத்து, அவரின் பெருமைகளை சொல்வது படத்துக்கு பிளஸ். படம் முடியும்போது இனி மெரினா கடற்கரை பெயரை மாற்றினால் நல்லது, அதை திராவிட கடற்கரை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அங்கே பல திராவிட அரசியல்வாதிகள் நினைவிடம் இருக்கிறது என்று முதல்வருக்கு புது கோரிக்கையும் வைத்து இருக்கிறார் ஹீரோ கம் தயாரிப்பாளர்.
மங்காத்தா
இந்த வாரம் வந்த படங்களில் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜூன், திரிஷா நடித்த மங்காத்தாதான் டாப்பில் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆன இந்த படத்துக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களில் நல்ல வரவேற்பு. ஒட்டுமொத்தமாக 400க்கும் அதிகமான தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது மங்காத்தா.
படத்தின் முக்கியமான காட்சிகள், சண்டை காட்சிகள், பாடல்களை மீண்டும் பார்க்க ‘ஒன்ஸ்மோர்’ கேட்டு அன்பு தொல்லை கொடுத்துவருகிறார்கள் அஜித் ரசிகர்கள். பல தியேட்டர் நிர்வாகம் ரசிகர்கள் விருப்பத்தை நிறைவேற்றி வருகின்றன. முதல்நாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு மேல் வசூலித்து மங்காத்தா ரீ ரிலீசில் சாதனை படைத்துள்ளது. வரும் வாரங்களிலும் படத்துக்கு புக்கிங் நிலவரம் நன்றாக உள்ளது.
– மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்











