நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரூ.1 கோடி என்ன ஆனது? நடிகர் ரஜினிக்கு திமுக மாணவர் அணி கேள்வி

பிரதமர் மோடி அறிவித்த நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை கொடுப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சொன்னது என்ன ஆனது என திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 2017-ம்…

பிரதமர் மோடி அறிவித்த நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை கொடுப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சொன்னது என்ன ஆனது என திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

2017-ம் ஆண்டு சமயங்களில் இந்தியாவில் சரி வர பருவமழை பெய்யவில்லை. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் கடும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கின. இதனால் பல லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் காய்ந்து போனது. அதே நேரம் அந்த ஆண்டு பீகார், அசாம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனத்த மழை பெய்து கடும் வெள்ளம் ஏற்பட்டது.

அண்டைநாடுகளான வங்காளதேசம், நேபாளம் ஆகியவற்றில் பெய்த பலத்த மழை காரணமாகவும் இந்திய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதுமட்டுமின்றி கங்கை, கோதாவரி, நர்மதை உள்ளிட்ட மிகப்பெரிய நதிகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடியது.

இதையடுத்து வறட்சியையும், வெள்ளத்தையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் வகையில் நதிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்தது. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 2002–ம் ஆண்டு நாட்டிலுள்ள நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது.

இந்த திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்தது. நாட்டின் மிகப்பெரிய 60 நதிகளை இணைக்கும் இத்திட்டத்திற்கு ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக உத்தரப்பிரதேசம்–மத்தியப்பிரதேசம் இடையே ஓடும் கென் நதியையும், மத்திய பிரதேசத்தில் ஓடும் பத்ராவதி நதியையும் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த இரு நதிகளும் சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் இதைத்தொடர்ந்து படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் நதிகளை இணைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சொன்னபடி திட்டம் பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டிருந்தாலும், அதற்கான எந்த முன்னெடுப்புகளையும் மத்திய அரசு இதுவரை பெரிதாக செய்யவில்லை.

அதேபோல் நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக கூறியிருந்தார். ஆனால் அவரும் சொன்னபடி இதுவரை நன்கொடை வழங்கவில்லை.

இந்த நிலையில், ரூ.5½ லட்சம் கோடி செலவில் நாட்டில் உள்ள 60 முக்‍கிய நதிகளை இணைக்‍கு மிகப்பெரிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது என்ன ஆனது என திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் அறிவிப்பை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;

பிரதமர் மோடி அறிவித்த இந்திய நதிகளை இணைக்கும் திட்டதிற்கு ரூ1 கோடி நன்கொடை கொடுப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சொன்னது என்ன ஆனது? 2017ல் நதி நீர் இணைப்புக்கு என ரூ 5.5 இலட்சம் கோடிகள் ஒதுக்கீடு செய்து இந்திய நதிகளை இணைப்புகளை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் என்ன ஆனது? ஒதுக்கபட்ட பணம் எங்கே போனது?. இவ்வாறு ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

https://twitter.com/rajiv_dmk/status/1678980254927564800?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.