டாக்டர் படத்தில் பார்த்த வேற மாதிரியான சிவகார்த்திகேயனை இந்த படத்திலும் பார்க்கலாம் என மாவீரன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி, இயக்குநர் மடோன் அஸ்வின், மிஷ்கின், நடிகை சரிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயன் கூறியதாவது, “
’மண்டேலா’ படத்தை என் மகளும், என் அம்மாவும் ரசித்து பார்த்தார்கள். சமூக கருத்தை மிக அழகாக மாவீரன் படத்திலும் இயக்குனர் கூறி இருக்கிறார். டாக்டர் படத்தில் பார்த்த வேற மாதிரியான சிவகார்த்திகேயனை இந்த படத்திலும் பார்க்கலாம்.
லோகேஷ் கனகராஜ் என்னிடம் அவர் கடைசி பெஞ்ச் மாணவர், ஆனால் மடோன் அஸ்வின் முதல் பெஞ்ச் மாணவர், அவர் முழுவதுமாக ஆராய்ச்சி செய்து தான் படம் எடுப்பார் என கூறினார். ஆனால் நான் நடிக்கும்போது தான் தெரிந்தது மடோன் அஸ்வின் ஒரு ஹெட் மாஸ்டர் என்று.
இயக்குனர் மிஷ்கினின் அனைத்து படங்களையும் நான் பார்த்துள்ளேன். அவரது நேர்காணல்களை பார்க்கும்போது அவர் மிக முரட்டுத்தனமான ஆள் என நினைத்தேன். ஆனால் இப்போது தான் அவர் மிகவும் நல்ல மனிதர் என்று. அவரின் அருமையான நடிப்பை இந்த படத்தில் பார்க்கலாம்.” இவ்வாறு கூறினார்.







