இந்திய அணியின் எதிர்காலம் சுப்மன் கில்தான் என விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா – நியூஸிலாந்து இடையயான 3வது டி-20 போட்டி அஹமாதபாத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் பிடித்த இந்திய அணி 20 ஓவர்களில் 234 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அதிரடியாக ஆடி 63 பந்துகளில் 126 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய நியூஸிலாந்து அணி 66 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறப்பாக ஆடிய சுப்மன் கில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 12 ஃபோர்கள், 7 சிக்ஸ்ர்கள், 200 ஸ்ட்ரைக் ரேட்டுன் கில் ஆடிய இந்த வெறித்தனமான இன்னிங்ஸ் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. டி-20 போட்டிகளில் இந்திய அணிக்காக இதற்கு முன்பு விராட் கோலி 122 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து டி-20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் அடித்தவர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.

மேலும் டெஸ்ட், ஒருநாள், டி-20 என்று மூன்று போட்டிகளிலும் சதமடித்த ஐந்தாவது இந்தியர் என்ற சாதனையையும் கில் படைத்திருக்கிறார். ரெய்னா, ரோஹித் சர்மா, கோலி, ராகுல் பட்டியலில் கில்லும் இணைந்திருக்கிறர். கில்லின் இந்த வெறித்தனமான ஆட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மனைவி, குழந்தையுடன் சுற்றுலா சென்று வந்த விராட் கோலி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நட்சத்திரத்துடன் “இந்தியாவின் எதிர்காலம் இங்கு தான் இருக்கிறது.” என கில்லுடன் அவர் இருக்கும் படத்தை பதிவிட்டு பாராட்டியுள்ளார்.
-ம.பவித்ரா