ஒடிசா மாநிலத்தில் மேற்கொண்ட பயணம் குறித்த அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி , ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 19, 20 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வர் அருகே உள்ள இஷநேஸ்வர் பிஜு ஆதர்ஷ் காலனியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பணிகளை உதயநிதி பார்வையிட்டார். அவருக்கு ஒடிசா மாநில அரசு அதிகாரிகளும், மக்களும் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். குடிநீர் திட்டப் பணிகள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் உதயநிதிக்கு ஒடிசா மாநில அதிகாரிகள் விவரித்தனர். திட்டங்கள் குறித்த சில சந்தேகங்களை உதயநிதி கேட்க, அது குறித்த தெளிவான விளக்கங்களையும் அரசு அதிகாரிகள் விவரித்திருக்கிறார்கள் .
இந்த பயணத்தைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், ஒடிசா மாநில விளையாட்டுத் துறைக்கும் தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்கும் இடையே சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் மேற்கொண்ட பயணம் குறித்த அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
-ம.பவித்ரா








