பாகிஸ்தானில் 2 சீக்கியர்கள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே வசித்து வந்த சீக்கியர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் அருகே மளிகைக் கடை நடத்தி வந்த சீக்கியர்களான ரஞ்சித் சிங், குல்ஜித் சிங் ஆகியோர்,…

பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே வசித்து வந்த சீக்கியர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் அருகே மளிகைக் கடை நடத்தி வந்த சீக்கியர்களான ரஞ்சித் சிங், குல்ஜித் சிங் ஆகியோர், இன்று தங்கள் கடைகளில் இருந்தபோது, இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதற்கு ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பாகிஸ்தானும் இந்தியாவும் தோல்வி அடைந்துவிட்டதாக அதன் தலைவர் ஹரிந்தர் சிங் தாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், இருந்தும் பாதிக்கப்படுவர்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

இந்த கொலை சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த அனைவருக்குமே பாகிஸ்தான் சொந்தம் என கூறியுள்ள அவர், இந்த கொலைச் சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.