த்ரெட்ஸ் அறிமுகமான 24 மணி நேரத்திற்குள் மெட்டாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என ட்விட்டர் நிறுவனம் மிரட்டியுள்ளது.
ட்விட்டர் போன்ற ஒரு தளத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்கு த்ரெட்ஸ் என்றும் பெயரிட்டு ஜூலை 6ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதனை கொண்டே த்ரெட்ஸை பயன்படுத்தலாம். இதற்காக தனி கணக்கு தொடங்க தேவையில்லை. இதில் ஒருவர் 500 எழுத்துக்கள் வரை ஒரு பதிவில் எழுதலாம். textகள் பிரதானம் என்றாலும் கூட, புகைப்படங்கள், ஷார்ட்ஸ், வீடியோக்களையும் பகிர முடியும் .
அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல கோடி பயனர்கள் அதனை டவுன்லோடு செய்து கணக்கு தொடங்கினர். இந்நிலையில் மெட்டாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் மிரட்டியுள்ளது.
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான செயலியின் வர்த்தக ரகசியங்கள் தொடர்பான விவகாரத்தில் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு ட்விட்டர் வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் ட்விட்டரின் முன்னாள் ஊழியர்களை பணி அமர்த்துவதன் மூலம் அதன் முந்தையை வர்த்தக ரகசியங்களை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். த்ரெட்களை உருவாக்க மெட்டா “ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் பிற அறிவுசார் தகவல்களை வேண்டுமென்றே மற்றும் சட்டவிரோதமாக தவறாகப் பயன்படுத்துவதில் ஈடுபட்டதாக கடிதத்தில் அவர் கூறியுள்ளார். ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் அல்லது பிற ரகசிய தகவல்களை பயன்படுத்துவதை நிறுத்த மெட்டா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே மெட்டா செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன், த்ரெட்ஸில் உள்ள பொறியாளர் குழுவில் ட்விட்டர் முன்னாள் ஊழியர்களும் எவரும் இல்லை என்று கூறியுள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க் இணையத்தில் சிறந்த செயலிகளை சிறு மாற்றம் செய்து அதில் வெற்றிகளை கண்டவர். மிகப்பிரபலமான டிக் டாக் செயலியை போல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸை உருவாக்கியவர். டிக் டாக் செயலி பல நாடுகளில் தடை செய்யப்பட்ட நிலையில், ரீல்ஸ் தற்போது முதலிடத்தில் உள்ளது. எனவே எதிர்காலத்தில் ட்விட்டருக்கு த்ரெட்ஸ் கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.





