கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த நம்பகத்தன்மையான தகவல்களை மக்களுக்கு வழங்க தமிழக பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இருப்பினும் சமூகவலைதளங்களில் கொரோனா தடுப்பூசி குறித்து பொய்யான செய்திகள், வதந்திகள் பரவி வருகின்றன. இது கொரோனா தடுப்பூசி குறித்த விளிப்புணர்வை மக்களுக்கு தெரியப்படுத்துவதில் மிக சிரமத்தை அரசுக்கு ஏற்படுத்துகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி எங்கு செலுத்தப்படுகிறது, தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான சரியான வயது, தனியார் மருத்துவமனையில் தடுப்பூசியின் விலை தடுப்பூசி செலுத்தி கொண்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த தகவல்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மருத்துவர்கள் அளிக்கும் விளக்கங்கள் ஆகியவற்றை ஐநாவின் யுனிசெஃப் அமைப்பு தமிழக பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து வழங்குகிறது. இதற்காக பிரத்யேகமாக வாட்ஸ் அப் எண், பொதுமக்கள் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்க மொபைல் எண் ஆகியவற்றை யுனிசெஃப் உருவாக்கியுள்ளது.
மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை https://wa.me/919319357878?text=covas என்ற லிங்கின் மூலமும் +91 9319357878 எனும் எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசவோ அல்லது வாட்ஸ் அப் மூலம் “covas or cobas” என்று டைப் செய்து பெறலாம். மேலும், https://tnhealth.tn.gov.in/tngovin/dph/dphpm.php என்ற இணையத்தின் மூலமாகவோ தகவல்களை பெறலாம் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.







