ட்ரெண்டாகும் ரயில் பெண் – திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் இமான்

‘கண்ணோடு காண்பதெல்லாம்’ என்ற பாடலை ரயிலில் பிழைப்பிற்காக மிக நேர்த்தியாக பாடிய பெண்ணை நேரில் தொடர்பு கொண்டு பாராட்டுவதற்காக இசையமைப்பாளர் இமான் முயற்சி செய்து வருகிறார்.   இன்றைய டிஜிட்டல் யுகத்தில் திறமையும் ஆர்வமும்…

‘கண்ணோடு காண்பதெல்லாம்’ என்ற பாடலை ரயிலில் பிழைப்பிற்காக மிக நேர்த்தியாக பாடிய பெண்ணை நேரில் தொடர்பு கொண்டு பாராட்டுவதற்காக இசையமைப்பாளர் இமான் முயற்சி செய்து வருகிறார்.

 

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் திறமையும் ஆர்வமும் இருந்தால் வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என்பதை உறுதிபடுத்தும் வகையில் மற்றுமொரு சம்பவம் அரேங்கேறியுள்ளது. கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை ரயிலில் மிக நேர்த்தியாக பாடும் பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அந்த பெண்ணை தொடர்பு கொள்வதற்கான இணைப்பு அல்லது தொலைபேசி எண் கிடைக்குமா? என முன்ணனி இசையமைப்பாளர் இமான் கேட்டுள்ளார். இது போன்று திறமையான நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்புகள் மூலம் அங்கீகாரம் அளிப்பதை இமான் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 

இதற்கு முன்பாக, பார்வை மாற்றுத்திறனாளி திருமூர்த்தி, விஸ்வாசம் படத்தின் கண்ணானே கண்ணே பாடலை பாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டானது. திருமூர்த்தியின் திறமையை பாராட்டும் விதமாக அவரை நேரில் அழைத்து பாராட்டிய இமான், தான் இசையமைத்த சீறு படத்தில் பாடும் வாய்ப்பையும் வழங்கினார்.

இது மட்டுமின்றி கேரளா பாடகியான வைக்கம் ராஜலட்சுமியை தனது படத்தில் பாட வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனியார் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நாட்டுப்புற இசை கலைஞர்கள் செந்தில் ராஜலட்சுமி ஜோடி, முத்து சிற்பி போன்றோருக்கும் இமான் வாய்ப்பு வழங்கியிருந்தார்.

 

இவ்வாறு திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் இமான், தற்போது ரயிலில் பாடும் இந்த பெண்ணிற்கான அங்கீகாரத்தையும் அளிப்பார் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது. மேலும் அந்த பெண்ணின் குரல் அழகாக இருந்ததால், அவரை நேரில் அழைத்து பாராட்டுவதோடு, அவரது இசையில் பாடுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படலாம் என்பது இசைப்பிரியர்களின் எண்ணமாக உள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.