‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, நீட் முறைகேடு தொடர்பாக விரைவு நீதிமன்றம் அமைத்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி வீடியோ வாயிலாக உறுதி அளித்தார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக இன்று அமைச்சரவையும் கூட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயர்கல்வித்துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், இன்று நள்ளிரவு தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். இந்த நிலையில், சமூக ஆர்வலர் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டது குறித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே கூறியிருப்பதாவது,
“சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதால் நிம்மதி அடைகிறோம். அவரின் அசாதாரண தைரியத்திற்கும், தியாகத்திற்கும் நன்றி. நாட்டின் மனசாட்சியை சோனம் வாங்சுக் தட்டி எழுப்பியுள்ளார். சோனம் வாங்சுக்கின் உயிர் நம் தேசத்திற்கு மிகவும் முக்கியமானது. தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை அமைதி போராட்டம் தொடரும்”
இவ்வாறு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.




