மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் “கலைஞர் – இதய அரங்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:
நியாய விலை கடைகளில் பருப்பு வகைகள் குறைந்த விலையில் கிடைக்க இதுதான் காரணமா? நான் உணவுத் துறை அமைச்சராக இருக்கும் போது காலை 6:30 மணிக்கு கலைஞர் கருணாநிதி எனக்கு ஒரு அழைப்பு விடுக்கிறார். தினமலர் பத்திரிகை பார்த்தியா என கேட்டார்.
அப்போது நான் 13 வது பக்கம் பார்த்தேன் என சொன்னேன். என்ன செய்தி என கேட்டார்…
துவரம் பருப்பு ரூபாய் 65 ஆக விலை ஏறி விட்டது என சொன்னேன். 2007 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் விலைவாசி அதிகமாக இருந்த உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அத்தியாவசிய தேவை என்பதை உணராமல், என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்டார்.
நான் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன், திரும்ப சென்னை வந்ததும் அதனை சரி செய்ய முயல்கிறேன் என சொன்னேன். அப்போது நான் துறை சார்ந்த செயலாளரிடம் கேட்டேன், ஒரு முதலமைச்சர் என்னிடம் பருப்பு விலை என்ன என்பதை கேட்கிறார், எத்தகைய முதல்வராக இருக்கிறார் பார் என சொன்னேன்.
உடனடியாக சென்னை வந்ததும், துறை சார்ந்த செயலாளர் ஒருவரை கொண்டு பினான்சியர் ஒருவரையும் அழைத்து, வருடத்திற்கு நாம் குறைந்த விலையில் பருப்பு வகைகளை கொடுத்தால் என்ன செலவாகும் என கேட்டறிந்த போது அவர் 300 கோடி ரூபாய் ஆகும் என சொன்னார்.
அப்போது கலைஞர் என்னிடம், நீ ஒரு கிலோ பருப்புக்கு என்ன விலை நிர்ணயம் செய்து இருக்கிறாய் என கேட்டார். நான் 40 ரூபாய் என சொன்னேன், அப்போது கலைஞர் என்னிடம் நான் சொல்கிறேன், 30 ரூபாய்க்கு அதனை கொடு என சொன்னார்.
300 கோடி எனக்கு பெரும் விஷயம் அல்ல, எனது அன்பு சகோதரர்கள் வீட்டில் துன்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என சொன்னது தான், இன்று நியாயவிலை கடைகளில் பருப்பு வகைகள் குறைந்த விலைக்கு கிடைக்க காரணம் என்று நினைவலைகளைப் பகிர்ந்தார் அமைச்சர் எ.வ.வேலு.








