அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 13 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், அவர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை உள்பட 5 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. அதேபோல அவரது மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி முதன்மை செயல் அதிகாரி கார்த்திக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்த காரில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இரு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றன. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணியின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2006 -2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இந்த காலத்தில் அவர் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு சட்டவிரோதமாக செம்மண் குவாரிகளை ஒதுக்கியதாகவும், தனது மகன் கௌதம சிகாமணிக்கு 2 குவாரிகளை ஒதுக்கியதாகவும் புகார் எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு ரூ.28 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனை அடிப்படையாக கொண்டு தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து செல்கின்றனர். அவரது மகன் பொன் கவுதம சிகாமணியும் சென்றுள்ளார். விசாரணையின் முடிவில் பொன்முடி கைது செய்யப்பட வாய்புள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




