திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலிலுள்ள தாமிரபரணி ஆற்றுக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 15 -க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் நேற்று குளிக்க சென்றனர். அவர்கள் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 6 பேரை ஆற்று நீர் இழுத்துச்சென்றனர்.
உடனடியாக அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் தீவிர முயற்சியினால் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், தூத்துக்குடியைச் சேர்ந்த வைஷ்ணவி மற்றும் மாரி அனுசியா ஆகிய இரு சிறுமிகள் நீரில் மூழ்கி மாயமாகினர்.
நீண்ட நேரமாக தேடியும் சிறுமிகள் இருவரும் கிடைக்காததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நீரில் மூழ்கி மாயமான வைஷ்ணவி என்ற சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இருள் காரணமாக மற்றொரு மாணவியை தேடும் பணி நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை மீண்டும் சிறுமியை தேடும் பணி தொடங்கியது. இந்த நிலையில், மாயமான மற்றொரு சிறுமி மாரி அனுசியா இன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







