“ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள ஆதியோகி சிலைக்கு உரிய அனுமதி பெறவில்லை!” – உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

கோவை ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்களை கட்ட எந்த ஒரு முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்…

கோவை ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்களை கட்ட எந்த ஒரு முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், வன விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. கோவை வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, ஆதியோகி சிலை உள்ளிட்ட கட்டுமான பணிகளை நிறுத்துவும், சீல் வைக்கவும் 2012ல் அரசு பிறப்பித்த உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யக்கோரி ஈஷா தரப்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் திட்ட அனுமதி, கட்டுமான அனுமதி வழங்கியது, வழிபாட்டு தளத்திற்கான சான்றிதழ், சுற்றுச்சூழலுக்கான சான்றிதழ், மலை இடர் பாதுகாப்பு சான்றிதழ் என எதுவும் ஈஷா யோகா அறக்கட்டளையால் பெறப்படவில்லை எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வாத பிரதிவாதத்தை கேட்ட நீதிபதி, மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்யவும், உரிய அனுமதி பெற்றிருக்காவிட்டால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கோவை நகர திட்ட இணை இயக்குனருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.