தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 2026-இல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தினார். தேர்தல் கூட்டணிகளை முடிவு செய்யும் பணியிலும் அதிமுக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த டிச.31-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அந்த வகையில், “ரேசன் அட்டையில் உள்ள குடும்பப்பெண்களின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ரூ.2000 செலுத்தப்படும். 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150நாட்களாக உயர்த்தப்படும். மகளிர் நலன் குலவிளக்கு திட்டத்தின் மூலம் மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்.
வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி வீடு கட்டி தரப்படும்.
ஆண்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
5 லட்சம் மகளிருக்கு ரூ.25,000 மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னையில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று திடீரென சந்தித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் திடீரென நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தனியரசு, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 சட்டசபை தேர்தலில் தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, அதிமுகவுடன் கூட்டணி வைத்து காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டது. இதில் வெற்றி பெற்று தனியரசு எம்.எல்.ஏ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.







