மணிப்பூர் வீடியோ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை – முதலமைச்சர் பைரன் சிங் உறுதி!

மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக…

மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி நேற்று இணையத்தில் வைரலானது. இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இந்த காணொலிக்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்த காணொலியை கண்ட மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பரவிய காணொலியில் காணப்படும் சம்பவம் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் நடந்ததாகவும், கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனிடையே, இந்த வீடியோவை ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்கும், சமூக ஊடகங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  “நேற்றைய தினம் வெளிவந்த துயரமான காணொலியில் காட்டப்பட்டுள்ளபடி, 2 பெண்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீடியோ வெளியான உடனேயே, மணிப்பூர் காவல்துறை நடவடிக்கையில் இறங்கி இன்று காலை முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டது. தற்போது முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் குற்றவாளிகள் அனைவருக்கும் எதிராக மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம். நம் சமூகத்தில் இது போன்ற கேவலமான செயல்களுக்கு இடமே இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

https://twitter.com/NBirenSingh/status/1681895346962563072?s=20

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.