இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு – வோடஃபோனால் நொந்த ஜெட் ஏர்வேஸ் சிஇஓ

வோடஃபோன் நிறுவனத்தில் இருந்து தன்னை அழைக்க வேண்டாம் என ஜெட் ஏர்வேஸ் சிஇஓ கூறியுள்ளார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சிஇஓ சஞ்சீவ் கபூர் தன் ட்விட்டர் பக்கத்தில், “நாட்டின் சில பகுதிகளில் மோசமான கவரேஜ்…

வோடஃபோன் நிறுவனத்தில் இருந்து தன்னை அழைக்க வேண்டாம் என ஜெட் ஏர்வேஸ் சிஇஓ கூறியுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சிஇஓ சஞ்சீவ் கபூர் தன் ட்விட்டர் பக்கத்தில், “நாட்டின் சில பகுதிகளில் மோசமான கவரேஜ் மற்றும் குறைவான சர்வதேச ரோமிங் திட்டங்களே இருப்பதால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் சேவையில் இருந்து வெளியேறி, தன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்றப் போகிறேன்.” என்று கூறியிருந்தார். இது ட்விட்டரில் வைரல் பதிவானது. பலர், தங்களுக்கு வோடஃபோன் மூலம் மோசமான சேவை கிடைப்பதாக குமுறியிருந்தனர்.

இதனிடையே வோடஃபோன் நிறுவனத்தில் இருந்து சஞ்சீவ் கபூருக்கு பலமுறை அழைத்து, தங்கள் சேவையில் இருந்து வெளியேற வேண்டாம் என வற்புறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து சஞ்சீவ் மீண்டும் தன் ட்விட்டரில் “வோடஃபோனை டேக் செய்து, என்னை தொடர்பு கொள்வதை நிறுத்தவும். சேவையை மாற்ற வேண்டாம் என மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறீர்கள். நான் ஏன் வெளியேறுகிறேன் என்பதற்கான காரணங்களை தெளிவாக சொல்லிவிட்டேன். அவ்வளவுதான் நன்றி.” என கூறியிருந்தார்.

https://twitter.com/TheSanjivKapoor/status/1624670726342213634?s=20&t=JZmoNdlK85hlTglroHaxxg

 

 

இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்த வோடஃபோன் நிறுவனம், “ஹாய் சஞ்சீவ். உங்கள் பிரச்னை புரிகிறது. விரைவில் அது சரி செய்யப்படும். தொடர்பில் இருங்கள்.” என கூறியது. பதறிப்போன சஞ்சீவ், “என்னுடன் தொடர்பில் இருக்கவே வேண்டாம். இதைத்தான் நான் தொடர்ந்து வலியுறுத்துகிறேன். ஏற்கனவே டஜன் கணக்கில் அழைத்துவிட்டீர்கள். அதை நிறுத்துங்கள். அவ்வளவுதான்.” என்று கூறியிருந்தார்.  ஆனால் வோடஃபோன் நிறுவனம் மீண்டும் சஞ்சீவை தொடர்பு கொண்டுள்ளது.

இதுகுறித்து அவர் மீண்டும், “தற்போது மீண்டும் அழைப்பு வந்துள்ளது. எங்களது சேவையில் ஏதாவது பிரச்னையா என கேட்கின்றனர். இந்த அழைப்புகளை நிறுத்த என்ன செய்ய வேண்டும். இது மிகவும் அபத்தமானது. ஏற்றுக் கொள்ள முடியாது. வோடஃபோன் உயர் அலுவலர்கள் யாராவது ட்விட்டரிலேயே பதில் சொல்லுங்கள்.” என்று கூறியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.