முக்கியச் செய்திகள்தமிழகம்

ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாடு | தொழிலதிபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், “தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தநிலையில்,  நேற்று ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து,  தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:  

“ஸ்பெயின் நாட்டின் தலைநகரான ‘மாத்ரித்’ நகருக்கு நான் வருகை தருவது இதுவே முதல் முறை.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிகமுக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன்.  எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.  திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன்.

கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்ற நாடு ஸ்பெயின்.  இந்த நாட்டை இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை.  நான் பார்த்த வரையில் கலைகளின் நாடாகக் காட்சியளிக்கிறது. உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டிடத்திலும்,  தெருக்களிலும், ஒவ்வொரு மூலையிலும் உள்ளது.  அழகான நிலப்பரப்பும். துடிப்பான கலாச்சாரமும் இணையப் பெற்று,  மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக ஸ்பெயின் விளங்குகிறது.

பழம்பெரும் வரலாறும் பாரம்பரியமும் பெற்ற இந்த நாடு போன்றே,  வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழ்நாட்டின் சார்பாக இங்கு வந்து உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது.  கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள மொழி எங்கள் தமிழ் மொழி.

ஸ்பெயினுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு மிகப்பெரும் ஒற்றுமை இருக்கிறது.  காளை அடக்குதல் விளையாட்டு,  ஸ்பெயினின் தேசிய விளையாட்டாகவும் பாரம்பரிய விளையாட்டாகவும் விளங்குகிறது.  எங்கள் தமிழ்நாட்டிலும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு எமது கலாச்சாரத்தின் சின்னமாக,  உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காகவே தனியாக ஒரு ஸ்டேடியம் கட்டி இருக்கிறோம். வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு நீங்கள் வரும்போது அதனைப் பார்க்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்திலேயே,  நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஸ்பெயின் விளங்குகிறது.  எட்டு ஃபார்ச்சூன் 500′ நிறுவனங்கள் மற்றும் 20 ஃபார்ச்சூன் 2000′ நிறுவனங்களும், ஸ்பெயின் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன. தமிழ்நாட்டுடன் வணிக உறவு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில், 6-ஆவது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில்,  நான்காவது பெரிய பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல,  இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது.  இந்த இரண்டு பொருளாதாரங்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன.  கெஸ்டாம்ப், கமேசா. ரோக்கா, உர்பேசர். இன்கிடீம், ஆம்ப்போ, பபேசா, ஆர்பினாக்ஸ், கோர்லான் ஆகிய முக்கிய ஸ்பானிஷ் நிறுவனங்கள் எங்கள் நாட்டில் தற்போது செயல்பட்டு வருகின்றன.  இந்தப் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக, உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.

இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகள்,  ஜப்பான்,  சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளேன்.  தொடர்ச்சியாக அமெரிக்கா,  ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல இருக்கிறேன்.  கடந்த ஜனவரி 7,8 ஆகிய நாட்களில் நாங்கள் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அமெரிக்கா,  இங்கிலாந்து,  சிங்கப்பூர்,  ஜப்பான், கொரியா,  பிரான்ஸ்,  ஆஸ்திரேலியா,  ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்து இருந்தன.  மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள்.  30 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்கள் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள்.

மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது.  தங்கள் முதலீடுகளை பன்மடங்கு 130க்கும் மேற்பட்ட “ஃபார்ச்சூன் 500” நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று.  இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வாகனங்கள்,  குறிப்பாக மின்வாகனங்கள்.  மின்னணுக் கருவிகள்,  தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள்,  ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம்,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,  உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது.

இந்தத் துறைகளிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு,  உயிரிஅறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம்,  மருந்துகள்,  உணவு பதப்படுத்துதல்,  உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு,  ஸ்பெயின் முதலீட்டாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கு தொழில்களைத் துவங்க வரும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது.  பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம்.  இவை குறித்து தொழில்துறை அமைச்சரும்,  அலுவலகர்களும் விரிவாக உங்களுக்கு எடுத்துரைக்க உள்ளார்கள்.  எனவே தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று  கேட்டுக்கொண்டுக் கொள்கின்றேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இம்மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ‘Guidance’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு,  ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் மற்றும் ஸ்பெயின் நாட்டு தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

பனி சூழந்த ஜம்மு காஷ்மீர்… உமர் அப்துல்லா பதிவிட்ட வீடியோ வைரல்…

Web Editor

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! – கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு!

Web Editor

TTF வாசனின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி! – நீதிமன்றம் அதிரடி!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading