பாடகி எஸ்.ஜானகி உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் – கர்நாடக அரசு அறிவிப்பு!

பாடகி எஸ்.ஜானகி உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி எஸ். ஜானகி(88) உடல்நலக் குறைவால், மைசூருவில் உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசம் அடையவே உடனடியாக மைசூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகிக்கு சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

இதனையடுத்து மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் ஜானகியின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. அதன்பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

1957-ல் விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம், திரையுலகில் நுழைந்த ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில், 40,000திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ள எஸ். ஜானகி, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநில அரசுகளிடமிருந்து 33-க்கும் மேற்பட்ட மாநில விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2013-ல் இந்தியாவின் உயரிய விருதான ‘பத்ம பூஷன்‘ விருது இவருக்கு அறிவிக்கப்பட்டபோது, தனக்கு அது தாமதமாக கிடைப்பதாகக் கூறி, அதை ஏற்க மறுத்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டுடன் தான் பாடுவதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்த அவர், அதன் பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து முழு ஓய்வில் இருந்து வந்தார். இதனிடையே மறைந்த பாடகி எஸ்.ஜானகியின் உடலுக்குத் திரை உலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.