ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9-ம் தேதி இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 4-ம் தேதி காலை 10 மணி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 7-ம் தேதி காலை 10 மணி முதல் 9-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மது விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12-ம் தேதி, வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 5 கிலோ மீட்டர் வரையிலான பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.







