காதல் இயக்குநர் to கலக்கல் வில்லன்; கௌதம் மேனனின் திரைப்பயணம்

காதல் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று கலக்கல் வில்லனாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் கௌதம் மேனனின் திரைப்பயணம் குறித்து தற்போது பார்க்கலாம். நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் என்றும் கொண்டாட மறப்பதில்லை. அதிலும் காதல்…

காதல் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று கலக்கல் வில்லனாக
ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் கௌதம் மேனனின் திரைப்பயணம் குறித்து தற்போது பார்க்கலாம்.

நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் என்றும் கொண்டாட மறப்பதில்லை. அதிலும் காதல்
படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. காதலை வெறுப்பவர்கள் கூட இப்படிப்பட்ட படங்களை பார்த்தால் மனம் மாறிவிடுவார்கள் என்று சொல்லலாம். அப்படி சிறந்த காதல் படங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயம் கௌதம் மேனனின்
படங்களும் இடம் பெற்றிருக்கும். ஆங்கிலம் கலந்த தமிழில் ஸ்டைலாக வலம் வரும்
ஹீரோக்களும், அவர்களுக்கு சற்று அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஹீரோயின்களுமே
கௌதம் மேனனின் படங்கள்.


மின்னலே என்னும் காதல் கதையில் தொடங்கிய கௌதம் மேனனின் திரைப்பயணம், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு தனி இடத்தையும் பிடிக்க வைத்தது.

கௌதம் மேனன் படங்கள் என்றால் காதலுக்கு மட்டும் முக்கியத்துவம் கிடையாது.
அதையும் தாண்டி அந்த படங்களில் வரும் பெண் கதாப்பத்திரங்கள் வலுவான
சுயசிந்தனையும், ஆண்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை
என்பதையும் வெளிப்படுத்தும்.


ஸ்டைலிஷான தோற்றம், நறுக்கென்ற வசனங்கள், இயல்பான மெல்லிய நகைச்சுவை, அறிவியல் விதிகளை கேலிக்குள்ளாக்காத சண்டைக் காட்சிகள் என கெளதமின் படைப்பு அவருடைய வெற்றிப் படங்கள் மட்டுமல்லாமல் தோல்விப் படங்களிலும் வெளிப்பட்டு ரசிகர்களை ஈர்த்தது. இது இயக்கம் மட்டுமல்லாமல் கௌதம் மேனனின் நடிப்பிலும்
பிரதிபலித்தது. கௌதமின் ஒவ்வொரு அசைவுகளும் அவர் தோன்றும் காட்சிகளில்
ரசிகர்களை ரசிக்க வைத்தது.


இவ்வுலகில் மனிதர்கள் தோன்றுவதும் மறைவதும் இயற்கையின் நியதி. அப்படி தோன்றும் மனிதர்களில் அரிதான படைப்பாளிகளை வெகு சில அரிதான மனிதர்களால் மட்டுமே கொடுக்க முடியும். அப்படிப்பட்ட அரிதான இயக்குநர்களில் கௌதம் மேனனும் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.