“அனைத்துவித அரசுப் பணி நியமனங்களிலும் இடஒதுக்கீட்டு விதிகளை பின்பற்ற வேண்டும்” – மத்திய அமைச்சர் #ChiragPaswan!

அனைத்துவித அரசுப் பணி நியமனங்களிலும் இடஒதுக்கீட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலா் முதல்…

அனைத்துவித அரசுப் பணி நியமனங்களிலும் இடஒதுக்கீட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலா் முதல் துணைச் செயலா்கள் வரையிலான 45 பணியிடங்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதிலாக தனியார் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை நேரடியாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விளம்பரத்தை அண்மையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஆளும் பாஜக அரசின் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியும் தற்போது எதிர்ப்புக் குரலை எழுப்பி உள்ளது. இது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் சிந்தனை முற்றிலும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகதான் உள்ளது. நேரடி நியமனத்தில் இடஒதுக்கீடு பரிசீலிக்கப்படவில்லை என்றால் நானும் எனது கட்சியும் முற்றியும் இதற்கு எதிரானவர்கள்.  நாங்கள் இதுகுறித்து  உரிய துறையிடம் பதிவு செய்துள்ளோம். வரும் நாட்களில் நேரடி நியமனத்தில் இடஒதுக்கீடு கேட்டு வலுவான குரல் எழுப்புவோம். அனைத்துவித அரசுப் பணி நியமனங்களிலும் இடஒதுக்கீட்டு விதிகளை பின்பற்ற வேண்டும்.

அரசுப் பணி நியமனத்தில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., இடஒதுக்கீடு பின்பற்றுவதை போன்று அனைத்து பணி நியமனத்திலும் அதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு, தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, அம்பேத்கர் உருவாக்கிய இடஒதுக்கீடு முறை அப்படியே தொடரும் என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தி இருக்கிறார். அதனால், நேரடி நியமனத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.”

இவ்வாறு லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான்  தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.