ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல்’ திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கொடூரமான விலங்கு போல ரன்பீர் ரத்தம் வடிய கையில் சுத்தியலுடன் சிகரெட் பிடிக்கும் முதல் பார்வை போஸ்டர் ஜனவரியில் வெளியாகியது.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியப் படமாக தயாராகி வருகிறது. இப்படத்தை பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் தயாரித்து வருகின்றனர். அண்மையில் ‘அனிமல்’ படத்தின் டீசர் செப்.28-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் வெளியாக இருந்த நிலையில் தற்போது டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என இயக்குநர் தெரிவித்தார். பாடல்கள் அந்தந்த மொழிகளில் மாற்றப்பட்டு அதற்கேற்ப அதிக நேரமெடுப்பதால் இந்த தாமதமென இயக்குநர் வீடியோ வெளியிட்டு தெரிவித்தார். இந்த படத்திற்கான ஒளிப்பதிவு பணியை அமித் ராய் செய்கிறார். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் அவரது கதாபாத்திர பெயர் ‘கீதாஞ்சலி’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனில் கபூரின் கதாபாத்திர லுக்கை படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.







