அமலாக்கத்துறை பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமனம்!

அமலாக்கத்துறை தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் நேற்று அதாவது செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது சிறப்பு இயக்குநர் ராகுல் நவின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஆர்எஸ் அதிகாரி ராகுல்…

அமலாக்கத்துறை தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் நேற்று அதாவது செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது சிறப்பு இயக்குநர் ராகுல் நவின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஆர்எஸ் அதிகாரி ராகுல் நவீன் அமலாக்க இயக்குனரகத்தின் பொறுப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ உத்தரவு வெள்ளிக்கிழமை  வெளியானது. சஞ்சய் குமார் மிஸ்ரா ED இயக்குநராக சுமார் 4 ஆண்டுகள் 10 மாதங்கள் பணியாற்றினார்.

யார் இந்த ராகுல் நவீன்?

ராகுல் நவீன் 1993 பிரிவு ஐஆர்எஸ் அதிகாரி. பீகாரைச் சேர்ந்த ராகுல் நவீன் சிறப்பு இயக்குனராக மட்டுமல்லாமல், ED தலைமையகத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். புதிய இயக்குநரை முறைப்படி நியமிக்கும் வரை அவர் செயல் இயக்குநராகப் பொறுப்பேற்பார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எஸ்.கே.மிஸ்ராவுக்கு மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது:
சஞ்சய் குமார் மிஸ்ரா 2018 இல் ED இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2020 நவம்பரில் முடிவடைய இருந்தது. அவருக்கு மூன்று முறை சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்கட்சிகள் விமர்சித்ததோடு, இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்க சிவிசி சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதம், சஞ்சய் குமார் மிஸ்ராவின் மூன்றாவது பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

செப்டம்பர் 15ம் தேதி வரை பதவியில் இருக்க அனுமதி வழங்கப்பட்டது:

ஜூலை 31-ம் தேதிக்குள் அவர் பதவி விலக வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், அவர் அக்டோபர் 15ஆம் தேதி வரை பதவியில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அப்போது கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, செப்டம்பர் 15ம் தேதி வரை அவர் பதவியில் நீடிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.