தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நியூட்ரினோ திட்டத்தை கைவிட அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ஆம் தேதி எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால், சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகள் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையகத்தால் வரையறுக்கப்பட்ட மதிகெட்டான் – பெரியார் புலிகள் வழித்தடத்திற்குள் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அங்கு நியூட்ரினோ திட்டத்திற்காக மலையை குடைவது, பாறைகளை தகர்ப்பது போன்ற பணிகளை மேற்கொள்வது, இயற்கை சூழலை பாதிக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, பிரதமர் மோடி தலையிட்டு, நியூட்ரினோ திட்டத்தை கைவிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








